செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் நலத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஈஷா ஏரியில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, குடிநீர் வசதிகள் மற்றும் பராமரிப்பு நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டார். அங்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு பெறவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்காக நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் திரு. சந்தானம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.