ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரத்தில் தொடர் நீரோட்டத்தால் மண் அரிப்பு அதிகரித்து வருவதால், தூண்டில் வளைவு அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🌊 முகத்துவாரம் நகர்ந்து வரும் நிலை
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட இடைக்கழிநாடு பேரூராட்சியின் ஆலம்பரைக்குப்பத்தில் கழிவெளி நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது. மரக்காணம் வட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள், செய்யூர் வட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஓங்கூர் ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
🚤 மண் அரிப்பால் மீனவர்கள் அவதி
கடந்த இரண்டு ஆண்டுகளாக முகத்துவாரத்தில் தொடர்ந்து நீரோட்டம் காணப்படுவதால், நீரின் வேகம் மற்றும் திசை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பழைய முகத்துவாரம் இருந்த பகுதியிலிருந்து தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி சுமார் 100 மீட்டர் அளவிற்கு முகத்துவாரம் நகர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர். மேலும் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் தென்னை மரங்கள் கழிவெளி பகுதியில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
⚠️ வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம்
அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் அலைகள் அதிகரிப்பதால் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் கடப்பாக்கம் கடற்கரை பகுதி முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டு, படகு நிறுத்த இடமின்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முகத்துவார பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









