அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் பகுதிகளில் நடைபெற்ற ஆடி விழாக்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
🔥 பெரும்பேர் கண்டிகையில் தீமிதி விழா
அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த எல்லையம்மன் கோவிலில் ஆடி மாத 4வது வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காலை குளக்கரையில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்துடன் அம்மன் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஏராளமான விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மழுவடி சேவை மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
🛕 பெருக்கரணையில் ஆடிக்கிருத்திகை
சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் உள்ள நடுபழநி ஸ்ரீமரகத தண்டாயுதபாணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடைபெற்றது.
🙏 செய்யூர், காவனூரிலும் பக்தர்கள் தரிசனம்
விழாவில் சித்தாமூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செய்யூர் கந்தசுவாமி கோவில் மற்றும் காவனூர் குமரவேல் சுப்ரமணியர் கோவிலிலும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது. விழாக்களை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.











