10 ஆண்டுகள் காத்திருப்பு! இரும்புலிச்சேரி பாலம் எப்போது திறப்பு?

0
3

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பாலாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நெரும்பூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வி, வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பின்னர் தற்காலிகமாக மண்பாதை அமைக்கப்பட்டாலும், அது பருவமழை காலங்களில் அடிக்கடி சேதமடைந்து வந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட 5 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, செங்கல்பட்டு நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.46 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 2024 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்தப் பாலம், 22 தூண்களுடன் 644 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் மற்றும் 23 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்திலேயே பணிகள் முடிவடைய வேண்டிய நிலையில், இன்னும் நிறைவுபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பணிகள் தாமதமானதாக தெரிவித்துள்ள ஒப்பந்த நிறுவனம், அடுத்த மூன்று மாதங்களில் பணிகளை முடித்து பாலத்தை போக்குவரத்திற்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.