செங்கல்பட்டு அருகே வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகர் பகுதியில், தனியார் பள்ளி ஓட்டுநரின் வீட்டில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து 36 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வரும் மணிவண்ணன் (62), தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் கர்ப்பிணி மகள் ரேகாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 36 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




