ரோந்து பணியில் போலீசாருடன் வாக்குவாதம்; தாக்குதல் புகாரால் பரபரப்பு

0
2

சென்னை மதுரவாயலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மற்றும் மது போதையில் இருந்த நபர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மோகன்ராஜ் (39), நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி நகர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவலர் மோகன்ராஜ் அறிவுறுத்திய நிலையில், மது போதையில் இருந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவலருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அங்கிருந்து சென்ற மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சரவணன் (35), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, காவலர் மோகன்ராஜ் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கியதால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

மறுபுறம், ரோந்து பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்து, தகராறில் ஈடுபட்டதாக சரவணன் உள்ளிட்டோர் மீது தலைமைக் காவலர் மோகன்ராஜும் புகார் அளித்துள்ளார்.

இருதரப்பினரின் புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து தலைமைக் காவலர் மோகன்ராஜ் மற்றும் சரவணன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.