திறந்தவெளியில் நெல் மூட்டைகள்; மழையில் வீணாகும் அபாயம்

0
2

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட நல்லூர் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 30,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குறுவை நெல் மற்றும் மணிலா பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்காக செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டாரங்களில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, நல்லூர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து சுமார் 150 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 8,000 நெல் மூட்டைகள் மதுராந்தகம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மீதமுள்ள 2,000 நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு வசதியின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து தரம் குறையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு நிர்ணயித்த விலையை பெறுவதிலும் சிக்கல் ஏற்படக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, திறந்தவெளியில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்றி சேமிக்கவும், விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.