சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பான சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் **“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”**க்கு 2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
15 முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும். விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 01.04.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் சமூக நலனுக்காக தன்னார்வமாக மேற்கொண்ட சேவைகள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்திருக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், பொதுமக்களிடையே உள்ள செல்வாக்கு மற்றும் சேவையின் பயன் ஆகியவை தேர்வில் முக்கியமாக கருதப்படும்.
விருப்பமுள்ள இளைஞர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் 06.07.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல், தேவையான ஆவணங்களின் மூன்று பிரதிகள், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழுடன் 07.07.2026 மாலை 4.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





