செங்கல்பட்டு புறவழிசாலை புலிப்பாக்கம் அருகே சாலையில் இருந்த ஆபத்தான பள்ளத்தால் நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் நான்கு கார்களும் சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு புறவழிசாலை புலிப்பாக்கம் அருகே சாலை குண்டும் குழியுமாகவும், ஆபத்தான பள்ளங்களுடனும் காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (39), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றுவிட்டு, மணப்பெண்ணுடன் காரில் திண்டிவனத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பள்ளத்தை பார்த்த சத்தியராஜ், காரின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அடுத்தடுத்த கார்கள், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மொத்தம் நான்கு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, அவற்றின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில் சேதம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்துக்குள்ளான நான்கு கார்களையும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கார் ஓட்டுநர்கள் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு கார்கள் விபத்துக்குள்ளான போதிலும், அதிர்ஷ்டவசமாக சிறு காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர்.
#செங்கல்பட்டு #புறவழிசாலை #செங்கல்பட்டு_புறவழிசாலை #விபத்து #கார்_விபத்து #நான்கு_கார்கள் #புலிப்பாக்கம் #தேசியநெடுஞ்சாலை #சாலை_பள்ளம் #போக்குவரத்து_நெரிசல்













