Advertisement

செய்தியாளர்களைப் புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடித்த தவெக பொதுச்செயலாளர்: செங்கல்பட்டில் பரபரப்பு!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கிய த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அரசியல் நிலவரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் காரில் ஏறிச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கல்பட்டில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அலட்சியமாகத் தவிர்த்துவிட்டுச் சென்ற விவம் ஊடக வட்டாரத்தில் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தவெக தலைவர் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 23 பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் மற்றும் பிரசவ கால சிறப்புப் பரிசுப் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் கலந்துகொண்டு, குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்து முடித்த புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். அப்போது, தமிழகத்தின் நடப்பு அரசியல் நிலவரங்கள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்ப அங்கு திரண்டிருந்த செய்தி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்களது மைக்குகளுடன் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

Advertisement

ஆனால், ஊடகங்களையும் செய்தியாளர்களையும் சற்றும் பொருட்படுத்தாத புஸ்ஸி ஆனந்த், அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் மௌனம் காத்தார். செய்தியாளர்கள் தொடர்ந்து மைக்குகளை நீட்டிக் கேள்வி கேட்க முயன்றபோதும் எதற்கும் பதிலளிக்காமல், முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டார். ‘விட்டால் போதும், தப்பித்தோம்’ என்ற பாணியில் செய்தியாளர்களை முற்றிலும் அலட்சியம் செய்துவிட்டு, அங்கிருந்து விறுவிறுப்பாகத் தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தி என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகி, மக்களின் பிரதிநிதிகளாக நின்று கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களைச் சந்திக்க அஞ்சி ஓடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நலத்திட்ட உதவிகளை வழங்கி விளம்பரம் தேடிக் கொள்ளத் தெரிந்த தவெக நிர்வாகிகளுக்கு, அரசியல் கேள்விகளை எதிர்கொள்ளும் பக்குவமும் துணிச்சலும் இல்லை என்பதையே புஸ்ஸி ஆனந்தின் இந்த ஓட்டம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தவெக பொதுச்செயலாளரின் இந்த அலட்சியப் போக்கு செய்தியாளர்கள் மத்தியில் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement