Advertisement

மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய அமைச்சர் அருண்ராஜ்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு இன்று தொடங்கியது. தேர்வான மாணவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் ஆணைகளை வழங்கினார்.

2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மாணவர்கள் மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நேரடி முதற்கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

Advertisement

காலை 8 மணிக்குத் தொடங்கிய கலந்தாய்வில், முதற்கட்டமாக விளையாட்டுப் பிரிவில் தரவரிசை 1 முதல் 25 வரை உள்ள மாணவர்களுக்கும், காலை 8:30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளான வரிசை எண் 1 முதல் 30 வரை உள்ளவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 மணிக்குத் தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் காலை 10 மணி முதல் கலந்தாய்வு தீவிரமாக நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 537 இடங்களும் (அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335, சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 202) மற்றும் பிடிஎஸ் படிப்பில் 104 இடங்களும் (அரசு கல்லூரிகளில் 16, சுயநிதி கல்லூரிகளில் 88) என மொத்தம் 641 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்ற இக்கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட பின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

Advertisement

நிகழ்வில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், 12 ஆண்டுகள் கடினமாகப் படித்து நீட் தேர்வில் சாதித்துள்ள மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டிப் பேசினார். சிறப்புப் பிரிவில் விளையாட்டுப் பிரிவுக்கு 15 இடங்கள் (13 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ்), முன்னாள் படைவீரர் பிரிவுக்கு 11 இடங்கள் (10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ்) மற்றும் விண்ணப்பித்த 108 தகுதியான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டு, இன்றைய நாளில் மொத்தம் 614 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன், மீதமுள்ள இடங்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் என உறுதியளித்தார்.

இருப்பினும், மேடையில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது ‘மாற்றுத்திறனாளிகள்’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘உடல் ஊனமுற்றோர்’ என அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிட்டது, அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களிடையேயும் அவர்களின் பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உறுதியானால் கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு பெறச் சட்டப்போராட்டம் தொடரும் அதே வேளையில் மாணவர்களுக்கு உரியப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் படுக்கையில் முட்டை வைக்கப்பட்டது தொடர்பாகப் பரவிய வீடியோ 5 மாதங்களுக்கு முந்தையது; பணம் கேட்டு மிரட்டிப் பரப்பப்பட்ட அதுகுறித்துத் தெளிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள மானியக் கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement