Home செங்கல்பட்டு செங்கல்பட்டில் பட்டப் பகலில் துணிகரம்: மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில் 36 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள்...

செங்கல்பட்டில் பட்டப் பகலில் துணிகரம்: மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில் 36 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை!

0

செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில், குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (62). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மகள் ரேகா (26) தற்போது கர்ப்பிணியாக இருப்பதால், கூடுவாஞ்சேரி அருகே காயாரம்பேடு பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து வந்து பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். மேலும், தனது பாதுகாப்பிற்காகத் தனக்குச் சொந்தமான 18 பவுன் தங்க நகைகளையும் பெற்றோர் வீட்டிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில், மணிவண்ணன் தனது மனைவி ராஜேஸ்வரி (50) மற்றும் மகள் ரேகா ஆகியோருடன் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரேகாவின் 18 பவுன் நகை மற்றும் ராஜேஸ்வரியின் நகை என மொத்தம் 36 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பட்டப் பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் குறித்து மணிவண்ணன் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கைரேகை நிபுணர்களின் உதவியோடு மர்ம நபர்களின் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாகத் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இரவு மற்றும் பகல் நேரங்களில் காவல் துறையினர் தங்களது ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பேரவை விதிகளின்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

NO COMMENTS

Exit mobile version