செங்கல்பட்டு அருகே அதிமுக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினரிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டி. ரவிக்குமார். இவர் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க மத்திய சங்க துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக கட்சியில் நிலவி வரும் உள்கட்சிப் பிரச்சினைகள் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிக்குமார் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவிக்குமாரின் திடீர் மரணம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
