விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கக் கேரளாவைப் போல் தமிழ்நாட்டிலும் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும் என சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்குத் தாங்களே நியாயமான விலையை நிர்ணயம் செய்ய முடியாத அவல நிலையைப் போக்க, கேரள மாநிலத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் ‘விவசாய விலை நிர்ணய ஆணையம்’ ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள இடர்பாடுகளை அவர் அவையில் மிக விரிவாகப் பட்டியலிட்டார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் தங்களது சொந்த நிலம், உடல் உழைப்பு, மின் கட்டணம், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்கள் என அனைத்திற்கும் பெரும் தொகையை முதலீடு செய்து பாடுபடுகின்றனர். ஆனால், இவ்வளவு கடின உழைப்பிற்குப் பிறகும் தாங்கள் வியர்வை சிந்தி உற்பத்தி செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளிடம் துளியும் இல்லை” என்று வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், “அண்டை மாநிலமான கேரளாவில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து அவர்களைக் காக்கவும் விவசாய விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதே நடைமுறையைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் விவசாய விளைபொருட்களுக்கான தனி விலை நிர்ணய ஆணையத்தை அரசு உடனே அமைக்க வேண்டும்; இதன் மூலம் மட்டுமே விவசாயிகளின் பொருளாதார இழப்பைத் தடுத்து அவர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்ய முடியும்” என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.













