செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் பிரதான சாலையில் அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட கோர விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில், திருக்கழுக்குன்றம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சாலையைக் கடக்க முற்பட்டது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
மோதிய வேகத்தில் இரண்டு வாகன ஓட்டிகளும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்தனர். விபத்தின் பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சை உலுக்கும் இந்த விபத்தின் நேரடி சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரைக் கலங்கடித்து வருகிறது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் பெருக்கம் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், மிதமிஞ்சிய வேகம் பேராபத்து என்பதையும், தலைக்கவசம் அணிவதே உயிர்காக்கும் அரண் என்பதையும் உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.













