வேலுச்சாமிபுரம் பகுதிக்கு நேரில் சென்று 41 பேருக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்த வேண்டும் – சவுக்கு சங்கர் அதிரடி

0
3

கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கர், கடந்த ஆண்டு பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வேலுச்சாமிபுரம் பகுதிக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீதான பணக் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள சூழலில், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டு நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வேலுச்சாமிபுரம் பகுதிக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும் சமூக ஊடகவியலாளர் சவால்காரர் சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பண மோசடி வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர், நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “விஜய் அவர்களை இந்த மண்ணின் மக்கள் தான் கோட்டையில் அமர வைத்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த எதிர்க்கட்சி ஆட்சியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் போதிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகள் இல்லாத காரணத்தால், பெண்கள், குழந்தைகள் என 41 பேர் நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது நிலவிய பாதுகாப்பு குறைபாடுகளால் அவரால் அங்குச் செல்ல முடியாமல், பின்னர் மகாபலிபுரத்திற்கு வரவழைத்துத் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற முடிந்தது. ஆனால், தற்பொழுது அவருக்கு முதலமைச்சருக்கான உச்சகட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பதவி ஏற்றதும் முதன்முறையாகக் கரூருக்கு வந்துள்ள முதல்வர் விஜய் அவர்கள், விபத்து நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து முந்தைய திமுக அரசை வன்மையாக விமரிசித்த அவர், “கடந்த திமுக அரசு பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், தங்களது ஊழல் பெருச்சாளிகளைக் காப்பாற்றுவதற்காகவே சிபிஐ (CBI) விசாரணையைத் தமிழ்நாட்டில் ரத்து செய்தது. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகள் உடனடியாக முடிவுக்கு வராது என்றாலும், தற்போதைய அரசு நினைத்தால் அவற்றை உடனே முடித்து வைக்க முடியும். நீதிமன்றங்கள் மட்டுமே எனக்குத் தார்மீக ரீதியாக ரிலீஃப் கொடுத்துள்ளன; என் வாழ்க்கை எப்போதும் ஒரு போராட்டக் களம் தான்” என்றார். மேலும், “கரூர் விபத்து குறித்துப் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் மற்றும் அதற்கு ஆதரவாகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது முந்தைய ஆட்சியில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் இந்த தவெக அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதேசமயம், விமர்சனம் செய்தார் என்பதற்காக யூடியூபர் மாரிதாஸைக் கைது செய்திருப்பது பாசிச அணுகுமுறை போல் மாறிவிடும்; இதனை முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.

அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய சவுக்கு சங்கர், “அதிமுக அழிய வேண்டும் என்று தவெக நினைக்கவில்லை, எடப்பாடி பழனிசாமி தான் அவ்வாறு நினைக்கிறார். அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்து கொண்டே, அவரது மகன் நடத்தி வரும் லட்சிய ஜனநாயகக் கட்சியை லீமா ரோஸ் வளர்த்து வருகிறார். அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போதுள்ள நபர்களை வைத்துக் கட்சியை எப்படி வளர்க்கப் போகிறார்? தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் லாட்டரி சீட்டுத் தொழிலைத் தொடங்குவதற்காக, தொழிலதிபர் மார்ட்டினிடம் இருந்து ₹300 கோடியைப் பத்திரங்களாக இபிஎஸ் வாங்கியுள்ளார் என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். சசிகலாவிடம் ₹3 கோடி வாங்கிக் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். திமுகவை அழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட அதிமுகவில் இருந்து, தற்பொழுது நிர்வாகிகள் கொத்துக் கொத்தாக வெளியேறி வருகின்றனர்; வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களால் ஒரு கவுன்சிலரைக் கூட உருவாக்க முடியாது” என்று அதிரடியாகத் தனது விமரிசனங்களை அடுக்கினார்.