Home செங்கல்பட்டு மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை

0

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாஸ்திரம்பாக்கம், ரெட்டிபாளையம், கொளத்தூர், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து இந்த நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை பெய்த கனமழையால் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 4,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் கொள்முதல் செய்ய காத்திருந்த நெல் குவியல்கள் மழையில் நனைந்தன. முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்படாததால் சில நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

பல மாதங்களாக உழைத்து விளைவித்த பயிர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சேதமடைந்து வருவதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version