பாழடைந்து வரும் புல்லேரி மூலிகை பண்ணை; மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர கோரிக்கை

0
3

செங்கல்பட்டு அருகே புல்லேரி பகுதியில் அமைந்துள்ள மூலிகை பண்ணை பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால், அதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள புல்லேரி கிராமத்தில், 1997ஆம் ஆண்டு சுமார் 202 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பண்ணை உருவாக்கப்பட்டது. மாவட்ட வனத்துறையின் பராமரிப்பில் செயல்பட்ட இந்தப் பண்ணையில் வில்வம், நாவல், வேம்பு, பெருநெல்லி, மூங்கில், நீர்மருது, பூவரசன் உள்ளிட்ட பல்வேறு மூலிகை மற்றும் மரவகை தாவரங்கள் வளர்க்கப்பட்டன.

அத்துடன், துளசி, சித்தரட்டை, செம்பருத்தி, இஞ்சி போன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாமல்லபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை சூழலில் அமர்ந்து மூலிகை தேநீர் அருந்தி மகிழ்ந்தனர்.

ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு குறைந்ததால் பண்ணை முழுவதும் புதர்கள் வளர்ந்து சேதமடைந்தது. மின் மோட்டார்கள், இரும்பு வேலிகள் உள்ளிட்ட உபகரணங்களும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு வனத்துறை சார்பில் மீண்டும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய மூலிகைச் செடிகள் நடப்பட்டன. எனினும், தற்போது மீண்டும் பராமரிப்பின்றி நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் இருக்கைகளும் சேதமடைந்துள்ளன.

எனவே, புல்லேரி மூலிகை பண்ணையை சீரமைத்து, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் இயற்கை சுற்றுலா மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.