அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் குரங்கின் உரிமையாளர் கேசவநாதனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை திட்டமிட்டுள்ளது.
நடிகர் விக்ரம் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிய வகை குரங்குடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், குரங்கின் உரிமையாளரான கேசவநாதனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவெடுத்துள்ளது.
நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை குரங்கு ஒன்றைக் கையில் வைத்திருப்பது போன்ற வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அரிய வகை வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பது மற்றும் காட்சிப்படுத்துவது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது.
இதனைத் தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தச் சாமியன் (Siamang) / மர்மோசெட் வகை குரங்கு வளர்ப்புப் பிராணிகள் விற்பனையாளரான கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கேசவநாதனின் வீட்டிற்கு நேரில் சென்ற வனத்துறை அதிகாரிகள் குழு அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
மேலும், அந்த அரிய வகை குரங்கை வளர்ப்பதற்கான உரிய உரிமம் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேசவநாதனுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பதிலளிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













