சித்தாமூர் அருகே உள்ள நல்லாமூர் கிராமத்தில் வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நல்லாமூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
இதையடுத்து, அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கால்வாயில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீருடன் உபரிநீரும் கலக்கிறது.
மேலும், சிலர் குப்பைகள் மற்றும் கழிவுகளை கால்வாயில் கொட்டுவதால் வடிகால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குடியிருப்பு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி இந்த பாதையை பயன்படுத்துவதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நீண்டகாலமாக தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வடிகால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாயை சுத்தம் செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
