கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி 11வது வார்டு ஜெய்பீம் நகரில், நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 சென்ட் நிலம் உள்ளது. இதில் 1,482 சதுர அடி பரப்பளவிலான நிலத்தை உதயா மற்றும் கணேசன் ஆகியோர் ஆக்கிரமித்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு 18 சென்ட் நிலத்தில், கோபால் மற்றும் நாகலிங்கம் ஆகியோர் தலா 525 சதுர அடி பரப்பளவிலான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த கோவில் சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.2.70 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் மீது ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2023ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் சொத்துகளை மீட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு வருவாய்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலங்களை மீட்டனர்.
இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கோவில் சொத்துகளை பாதுகாக்க அறநிலையத்துறை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
