Advertisement

ஹூண்டாய் மோபிஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: ₹500 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஹூண்டாய் மோபிஸ் (MOBIS Hyundai) கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. 10 ஏக்கர் பரப்பளவில், சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பில் இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலை வளாகத்தில் மொத்தம் செயல்பட்டு வந்த 3 யூனிட்களில், ஹூண்டாய் கார்களுக்கான ஆடியோ சிஸ்டம் மற்றும் ஏர்பேக் (AIR BAG) தயாரிக்கும் 2 முக்கிய உற்பத்தி கூடங்கள் இந்தத் தீ விபத்தில் சிக்கி முற்றிலும் எரிந்து நாசமாகின. விபத்து நேரிட்ட உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டதால், நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் நீண்ட நேரம் போராடி தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட கணிப்பின்படி, இரண்டு யூனிட்களிலும் வைக்கப்பட்டிருந்த கார் உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி இயந்திரங்கள் சேதமடைந்ததில் இழப்பு ₹500 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement