செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கிய பாலாற்று குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் பாலாற்றில் இருந்து குழாய் மூலம் மறைமலைநகர் நகராட்சிக்கு தினமும் சுமார் 36 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் கிராமம் வழியாக செல்கிறது.
இந்நிலையில், கொளவாய் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணிகளும், ரயில்வே மேம்பாலம் அருகே கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருமளவு குடிநீர் வீணாக வெளியேறியதுடன், மறைமலைநகர் பகுதிக்கான குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், பணிகளை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர்களின் உதவியுடன் புதிய 25 அடி நீள குழாய் வாங்கப்பட்டு, சேதமடைந்த பகுதியை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று முழு நாளும் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து குடிநீர் வாரிய பொறியாளர்கள் கூறுகையில், “குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக சரிசெய்யப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மறைமலைநகர் நகராட்சிக்கு மீண்டும் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் தொடங்கப்படும். இன்று முதல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், மறைமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
