Advertisement

மத்தியப் பிரதேச படகு விபத்து: வைரலான தாய்-மகன் புகைப்படம் உண்மையா?

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த கோர படகு விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பார்ப்போரைக் கண்கலங்கச் செய்தது.

படகு நீரில் மூழ்கிய அந்தப் பயங்கரமான தருணத்தில், ஒரு தாய் தனது மகனைப் பிரிய மனமில்லாமல் மார்போடு அணைத்தபடி உயிரிழந்து கிடப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. “தாயின் பாசம் மரணத்திலும் தொடர்கிறது” என்ற ரீதியில் இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, மக்களின் அனுதாபத்தைப் பெற்றது.

Advertisement

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் வைரலாகப் பகிரப்படும் அந்தப் புகைப்படம் அல்லது வீடியோ இந்த விபத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல என்று ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜபல்பூர் காவல்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு, அந்த வைரல் படத்திற்கும் பார்கி அணை விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட மறுத்துள்ளனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு, மகனை அணைத்தபடி தாய் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்ட அந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட “AI புகைப்படம்” என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

பார்கி அணையில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது மொத்தம் 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோகமான விபத்துக்களைத் தங்கள் சுய லாபத்திற்காகவோ அல்லது கவனத்தை ஈர்க்கவோ தவறான சித்திரங்களுடன் (AI படங்கள்) சமூக வலைத்தளங்களில் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement