தாம்பரம் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மாடம்பாக்கம் ஏரியை மாசுபடுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பு, குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், மாடம்பாக்கம் ஏரியை பாதுகாக்க உடனடி மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தீர்ப்பில், தாம்பரம் மாநகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என்றும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஏரிக்குள் கலப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக தேவையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து அவற்றின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நீர்வளத்துறை ஏரியை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதை சி.எம்.டி.ஏ. ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.
குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் ஏரி மற்றும் அப்பகுதி மக்களின் பொது சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர்வளத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், குரோம்பேட்டை ஏரியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வரும் மழைக்காலத்தில் நீர் சேமிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
