சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், திமுக முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்ற அப்பட்டமான பொய் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் ஆய்வு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்திருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புச் சேமிப்புக் கிடங்கில் கடந்த 8 நாட்களாக வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்தப் பரிசோதனைப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சேமிப்புக் கிடங்கிற்கு நேரில் வருகை தந்தார். அப்போது அங்குத் திரண்டிருந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வி.எஸ். பாபு, தேர்தல் களம் மிகவும் நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடத்தி முடிக்கப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்தார். தோல்வி பயத்தில் திமுக வாரி இறைக்கும் குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மையோ ஆதாரமோ இல்லை என்று சாடிய அவர், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறியுள்ள திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவின் பேச்சுக்குக் காட்டமான பதிலடி கொடுத்தார். எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் சந்திக்கத் தாம் மட்டுமின்றித் தங்களின் முதலமைச்சரும் முழுத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், தங்களின் பின்னால் மக்களும் தற்போதைய முதலமைச்சரும் உறுதுணையாக இருப்பதால் எதைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று முழங்கினார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தபோதே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி மனு அளித்த அதே நபர், தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தொடர்ந்து சந்தேகம் கிளப்புவது எந்த வகையான அரசியல் அணுகுமுறை என்பது புரியவில்லை என்றும் வி.எஸ். பாபு எள்ளல் நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.









