Advertisement

கிளாம்பாக்கம் அருகே சாலையில் பாயும் கழிவுநீர்: பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து கழிவுநீர் நிரம்பி சாலையில் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement

மழைநீர் தடையின்றிச் செல்ல அமைக்கப்பட்ட வடிகால் கால்வாய்களை உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாகத் தூர்வாராமல் அலட்சியமாக விட்டுவிட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, அருகில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கழிவுநீர் சட்டவிரோதமாக இந்த மழைநீர் வடிகாலில் கலக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே கால்வாயில் கழிவுநீர் நிரம்பி, பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சூழல் உருவாகியுள்ளது.

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையிலும், நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் முகப்பிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதசாரிகள் வேறு வழியின்றி அந்த கழிவுநீரிலேயே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிப்பதால், அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுப் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement