Advertisement

“கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்” – ரத்தான ‘மீசைய முறுக்கு 2’ கொண்டாட்டம்.. ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெறவிருந்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படக் கொண்டாட்ட நிகழ்ச்சி, ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாகக் காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில் ரத்து செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, ரசிகர்களைச் சந்திக்க முடியாமல் திரும்பியதற்கு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

தனியார் பண்பலை நிறுவனமான ‘பிக் எஃப்.எம்’ (BIG FM) சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தான் நேரில் பங்கேற்று ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடவுள்ளதாக ஹிப் ஹாப் ஆதி முன்னதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தார்.

Advertisement

ஹிப் ஹாப் ஆதியின் அறிவிப்பைக் கேட்டு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்தில் திரண்டனர். இதனால் மாலின் அனைத்துத் தளங்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அளவுக்கு அதிகமாக அதிகரித்ததாலும், மாலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், காவல்துறையினரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஹிப் ஹாப் ஆதியை மேடையேற வேண்டாம் என்றும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறும் அறிவுறுத்தினர். காவல்துறையினரின் வழிகாட்டுதலை ஏற்று, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, ரசிகர்களை நேரில் சந்திக்காமல் அங்கிருந்து பாதுகாப்பாகத் திரும்பிச் சென்றார்.

Advertisement

தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆதி, “மீசைய முறுக்கு 2 கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த ஆவலோடு வந்திருந்தேன். ஆனால், உங்களுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்களுடைய கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும், உங்களோடு இணைந்து இன்றைக்குக் கொண்டாட முடியவில்லையே என்பதில் மிகுந்த வருத்தம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement