Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: 455 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆவணி மாத முகூர்த்த தினம் மற்றும் விடுமுறையை ஒட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால், கூடுதலாக 455 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறை அடுத்தடுத்து வந்துள்ளதை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளின் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதி வருகிறது.

Advertisement

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகப் பணி நேரங்கள் முடிந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் மூட்டை முடிச்சுகளோடு பேருந்து நிலையத்தை நோக்கிச் சாரை சாரையாக வரத் தொடங்கினர். சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் (MTC) மூலமாக இடைவிடாது வந்து இறங்கும் பயணிகள், அங்கிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற வெளியூர்களுக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நடைமேடைகளில் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.

திடீரென ஏற்பட்டுள்ள இந்தப் பயணிகள் கூட்ட நெரிசலைச் சீர்செய்யவும், பொதுமக்கள் எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பயணம் செய்வதை உறுதி செய்யவும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இயக்கப்படும் தினசரிப் பேருந்துகளுடன் கூடுதலாக 455 சிறப்புப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களுக்குத் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும், இரவு நேரப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் கிளாம்பாக்கம் பேருந்து முனைய வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு மற்றும் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement