Advertisement

விபத்தில் பலியான கன்றுக்குட்டி: உடலை விட்டு நகர மறுத்து கதறிய தாய்ப்பசு மறைமலைநகரில் சோகம்!

செங்கல்பட்டு மறைமலைநகரில் கார் மோதி உயிரிழந்த கன்றுக்குட்டியின் உடலை விட்டு நகர மறுத்து தாய்ப்பசு கண்ணீர் வடித்த காட்சி காண்போரை உலுக்கியுள்ளது.

தாய்மை என்ற உணர்வுக்கு மனிதன், விலங்கு என்ற எந்தவித பாகுபாடும் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும், காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைக்கும் வகையிலும் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கார் மோதி உயிரிழந்த கன்றுக்குட்டியின் உடலை விட்டு நகர முடியாமல் தாய்ப்பசு கதறி நின்ற காட்சி பொதுமக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

மறைமலைநகர் பிரதான சாலையைக் கடக்க முயன்ற பச்சிளம் கன்றுக்குட்டி மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று பலமாக மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறு கன்றுக்குட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தது.

விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, தான் ஈன்றெடுத்த செல்லக் கன்று வீதியில் அசைவற்று கிடப்பதைக் கண்ட தாய்ப்பசு, வாகனப் போக்குவரத்து நிறைந்த அந்தச் சாலையில் எதைப் பற்றியும் யோசிக்காமல் பதறியடித்து ஓடி வந்தது. தன் கன்றின் உயிர் பிரிந்துவிட்டது என்ற கொடூர நிஜத்தை ஏற்க மனமில்லாமல், தன் நாவால் கன்றின் முகத்தை நக்கியும், மூச்சுக் காற்றை அதன் மீது செலுத்தியும், தன் கொம்புகளால் மெதுவாகத் தட்டியும் எழுப்பப் போராடியது. “எழுந்திரு மகனே…” என்று கதறுவது போல அது எழுப்பிய தீனமான முனகல் சத்தம், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் வழிப்போக்கர்களையும் நிலைகுலைய வைத்தது.

Advertisement

நேரம் செல்லச் செல்ல கன்றின் உடல் விறைக்கத் தொடங்கிய போதிலும், தாய் பாசத்தின் நம்பிக்கை தளராமல், தன் பிள்ளையை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அங்கேயே நின்றிருந்தது. அத்துடன் கூடவே மற்ற இரண்டு கன்றுகளும் அதன் அருகிலேயே சோகத்துடன் நின்றுகொண்டிருந்தன. இந்த நெஞ்சைப் பிழியும் துயரக் காட்சியைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கண்கலங்கி நின்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement