கூடுவாஞ்சேரி அருகே கோயிலுக்கு வந்த பக்தர்களை குரங்கு ஒன்று துரத்திக் கடித்ததில் 4 பெண் குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
🛕 கோயிலுக்கு திரண்ட பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் இருந்து நந்திவரம் செல்லும் பிரதான சாலையில் புதுப்பாளையத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
🐒 திடீரென தாக்கிய குரங்கு
அப்போது கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று திடீரென பக்தர்களை தாக்கத் தொடங்கியது. இதில் 4 பெண் குழந்தைகள் உட்பட 10 பேரை அந்த குரங்கு கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. குரங்கின் தாக்குதலைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். குரங்கை விரட்ட முயன்றவர்களையும் அது துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
🏥 மருத்துவமனைகளில் சிகிச்சை
குரங்கு கடித்ததில் காயமடைந்த 4 பெண் குழந்தைகள் உட்பட 10 பேரும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். கோயில் பகுதியில் பக்தர்களை குரங்கு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.









