டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவர் மீதான 3 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாகக் கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், அவர் மீது சுமத்தப்பட்ட 3 முதன்மை குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மக்களவை விசாரணைக் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனது விசாரணை அறிக்கையில் அதிரடியாகத் தெரிவித்து அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 14 அன்று டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் போது, அங்குள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ₹500 நோட்டுகள் அடங்கிய பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் (Impeachment) செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 2 தொகுதிகள் கொண்ட விரிவான அறிக்கையில், நீதிபதி வர்மா மீது சுமத்தப்பட்ட அரசு இல்லத்தில் கணக்கில் வராத பெரும் தொகையை வைத்திருந்தது, தீ விபத்திற்குப் பிறகு ஆதாரங்களைப் பாதுகாக்கத் தவறியது மற்றும் அதிகாரிகளின் விசாரணையின் போது மழுப்பலான மற்றும் பொய் பதில்களைக் கூறி திசைதிருப்ப முயன்றது ஆகிய 3 குற்றச்சாட்டுகளும் தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் அளித்த விளக்கங்கள் ‘அப்பட்டமான பொய் மற்றும் அவரது குற்ற உணர்ச்சியையே அதிகப்படுத்துகிறது’ என விசாரணைக் குழு தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட சட்டப் பணிகள் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.













