மும்பையில் நடைபெறவிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள் கூட்டம் ரத்தானதற்கு பாஜகவின் அச்சுறுத்தலே காரணம் என அக்கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தொண்டர்கள் கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பின்னணியில் ஆளும் பாஜகவின் அச்சுறுத்தலும் மறைமுக அழுத்தமுமே காரணம் என அக்கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காகவும், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP), மும்பையில் தங்களது முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காகத் தனியார் மண்டபம் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே மண்டப உரிமையாளர்கள் கூட்டத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்பதிவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே, ஆளும் பாஜக ஆட்சியாளர்களின் மிரட்டல் மற்றும் நெருக்கடி காரணமாவே மண்டப உரிமையாளர்கள் அஞ்சி நடுங்கி இந்தக் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாகச் சாடினார். ஜனநாயக ரீதியாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யக் கூட ஆளும் தரப்பு பயப்படுவதாகவும், அதிகார பலத்தைப் பயன்படுத்தி தங்களது குரலை நசுக்கப் பார்ப்பதாகவும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சித் பின்வாங்கப்போவதில்லை என்றும், விரைவில் மாற்று இடத்தில் தொண்டர்கள் கூட்டம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.













