செய்யூர் அருகே ஆலம்பரைகுப்பத்தில் நடைபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் 38-வது ஆண்டு ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
🌺 தண்டு மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா
செய்யூர் அடுத்த ஆலம்பரைகுப்பம் கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத 4-வது செவ்வாய்க்கிழமை ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 38-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பழம் குத்தி, செடல் ஏந்தி, வண்டி இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
🙏 வேண்டவராசி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம்
வண்டலூர் தாலுகா, பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தில் பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்டு வேண்டவராசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சைவம் மற்றும் வைணவம் இணைந்த ஆன்மிக தலமாக விளங்கும் இக்கோவில், சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3.5 கோடி செலவில் பரிவார தெய்வங்களுடன் புனரமைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று மண்டலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
🛕 பக்தர்கள் திரளாக பங்கேற்பு
மண்டலாபிஷேகத்தையொட்டி அம்மன் வீதியுலா, சங்காபிஷேகம், கூழ்வார்த்தல் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும், கும்பாபிஷேகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டு, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.










