செங்கல்பட்டு நகராட்சி குப்பைக் கிடங்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு மோட்டர் பழுதானதால், கழிவுநீர் லாரிகளைச் சிறைபிடித்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கழிவுநீர் லாரிகள் மற்றும் குப்பை சேகரிக்கும் வாகனங்களைச் சிறைபிடித்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுநீர், பச்சையம்மன் கோவில் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மோட்டார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியாமல் தேக்கம் அடைந்து, ஆறு போல் பெருக்கெடுத்து அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
இதனால் கடும் துர்நாற்றம் வீசியதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பச்சையம்மன் கோவில் பகுதி பொதுமக்கள், கழிவுநீர் கொண்டு வந்த 3 லாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்களைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த மோட்டாரை உடனடியாகச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கு கொட்டுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.













