Advertisement

ஆட்சியர் முன்னிலையில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்த கல்வி அலுவலர்: கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!

செங்கல்பட்டு அஞ்சூர் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் வாசித்தபோது இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்த பெண் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது மாவட்ட கல்வி அலுவலர் அலட்சியமாகத் தனது கைபேசியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு கிராமத்தின் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

கூட்டம் தீவிரமாக நடைபெற்று, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கியத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த வேளையில், மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட கல்வி அலுவலர் திருநிறைச்செல்வி, கூட்டத்தின் முக்கியத்துவத்தையோ அல்லது மக்களின் பிரச்னைகளையோ சற்றும் பொருட்படுத்தாமல் தனது கைபேசியில் முழுமையாக மூழ்கியிருந்தார். தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலேயே, அவர் எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்திற்கு வந்தது.

Advertisement

மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய அரசு உயர் அதிகாரி ஒருவர், கிராம சபை போன்ற ஜனநாயக மன்றத்தில் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அலட்சியமான போக்கைக் கடைப்பிடித்தது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறி சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீடித்த சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement