செங்கல்பட்டு மாவட்டத்தின் புக்கத்துறை-உத்திரமேரூர், படாளம்-வையாவூர் மற்றும் மதுராந்தகம்-மோச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெறுவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுராந்தகம்-மோச்சேரி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடைமேம்பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் சாலையை நேரடியாக கடக்க வேண்டிய சூழல் உருவாகி, 2021 முதல் 2024 வரை நடைபெற்ற விபத்துகளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விபத்துகளைத் தடுக்க மதுராந்தகம், மோச்சேரி, புக்கத்துறை மற்றும் படாளம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், 2024ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.90 கோடி நிதி ஒதுக்கி, புக்கத்துறை, படாளம்-வையாவூர், மதுராந்தகம்-மோச்சேரி மற்றும் திண்டிவனம் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளைத் தொடங்கியது. 2025ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டாலும், பல இடங்களில் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
குறிப்பாக புக்கத்துறை மற்றும் படாளம் பகுதிகளில் மேம்பாலங்கள் பெரும்பாலும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மேம்பாலத்துடன் சாலையை இணைக்கும் மண் நிரப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் அரசு விடுமுறைகளில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் குவிந்து, பல கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.





