Advertisement

வாக்களிக்கச் சென்ற நேரத்தில் வீடு இடிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தர்ணா!

செங்கல்பட்டு அருகே நிலத் தகராறு காரணமாக வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று செங்கல்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் ஆகியோருக்குச் சொந்தமான 40 சென்ட் நிலம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள மூன்று வீடுகளில் வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்தினர், கடந்த 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்றிருந்தனர். வீடுகள் பூட்டப்பட்டிருந்த அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராஜா மற்றும் அவரது உறவினர்கள், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீடுகளைத் தரைமட்டமாக இடித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினரின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்தும், அத்துமீறலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் சம்பத்குமார் மற்றும் கனிதா சம்பத் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. “சட்டப்பூர்வமாக நிலம் வைத்திருப்பவர்கள் மீதே இத்தகைய அத்துமீறல் நடப்பது கண்டிக்கத்தக்கது” என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement