மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்ற செங்கல்பட்டு கலெக்டர்

0
2

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நேற்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு. மரு. எம். வீரப்பன், இ.ஆ.ப., நேரடியாக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களில் இடம்பெற்ற கோரிக்கைகள் மற்றும் குறைகளை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கியூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) திருமதி பவானி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி விஜயகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு கதிர்வேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். இந்த சிறப்பு முகாம், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நேரடியாக அரசு நிர்வாகத்திடம் கொண்டு செல்லும் முக்கிய தளமாக அமைந்தது.