Advertisement

வந்தே மாதரம் பாடலில் 2 பத்திகள் மட்டுமே: காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கண்டனம்!

வந்தே மாதரம் பாடலின் 2 பத்திகளை மட்டும் பாடுவதற்கான காங்கிரஸ் கட்சியின் முடிவு தேச விரோதமானது மற்றும் சட்ட மீறல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார்.

தேசியப் பாடலான வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடாமல், முதல் 2 பத்திகளை மட்டுமே பாடுவது என காங்கிரஸ் செயற்குழு எடுத்துள்ள முடிவு தேச விரோதமானது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை வெளிப்படையாக மீறும் செயல் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை அமைப்பான காங்கிரஸ் செயற்குழு (CWC) கூட்டத்தில், தங்களது கட்சியின் 1937-ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சி நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இம்முடிவு குறித்து காட்டமாகப் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “1937-ஆம் ஆண்டில் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்காக வந்தே மாதரம் பாடலை இரண்டாகப் பிரித்து, நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் அடித்தளமிட்டது. அதே வரலாற்றுப் பிழையை இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், “பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா இயற்றிய வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த வரலாற்றுத் தவறைத் திருத்தி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அனைத்து அரசு விழாக்களிலும் முழுப் பாடலையும் பாட சட்டப்பூர்வ வடிவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியோ, நாடாளுமன்றச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டுத் தங்களது பழைய வாக்கு வங்கித் திருப்திப்படுத்தும் அரசியலையே மீண்டும் கையில் எடுத்துள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

Advertisement

சுதந்திரப் போராட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ முழக்கமிட்டுத் தூக்கு மேடையைத் தழுவிய லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், அமரர் பங்கிம் சந்திரரையும் இழிவுபடுத்தும் இந்த தேச விரோத நிலைப்பாட்டிற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement