Advertisement

பெல்ஜியத்தில் அஜித் குமார் ‘ரேஸிங்’ அதிரடி: 24 மணிநேர கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

உலகப் புகழ்பெற்ற கார் பந்தய வீரர்களுக்கு இணையாகத் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் அஜித் குமார். பெல்ஜியத்தின் ஸ்பா-ஃபிராங்கர்சாம்ப்ஸ் (Spa-Francorchamps) சர்க்யூட்டில் நடைபெற்ற சவாலான ’24 மணிநேர கார் பந்தயத் தொடரில்’, அஜித் குமார் ரேஸிங் அணி (Ajith Kumar Racing) இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

அஜித் குமார் ரேஸிங் மற்றும் ரெட் ஆண்ட் ரேஸிங் (Red Ant Racing) இணைந்து பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், அதிநவீன ‘மெர்சிடஸ் – ஏஎம்ஜி ஜிடி3’ (Mercedes-AMG GT3) ரக காரை அஜித் குமார் ஓட்டினார். ஜிடி3 புரோ-ஆம் (GT3 Pro-Am) பிரிவில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், இரண்டு தொழில்முறை ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு பொழுதுபோக்கு ஓட்டுநர்கள் என மொத்தம் நான்கு பேர் கொண்ட குழுவாக அஜித் குமார் அணி களமிறங்கியது.

Advertisement

பெல்ஜியத்தின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள இந்த ஸ்பா பந்தயத் தளம், அதன் ஏறி இறங்கும் பாதைகளுக்காகவும், கணிக்க முடியாத வானிலை மாற்றத்திற்காகவும் உலகளவில் சவாலானதாகக் கருதப்படுகிறது. மழை, வெயில் என மாறிமாறி வரும் சூழலில், மிகுந்த மனவுறுதியுடன் காரைச் செலுத்தி அஜித் குமார் அணி இந்த வெற்றியை எட்டியுள்ளது.

வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்தி வந்த அஜித் குமார், தனது அணியினருடன் வெற்றிக் கோப்பையைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அஜித் குமார் ரேஸிங் அணியின் எக்ஸ் (X) தளத்தில், “ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பெருமைப்படுத்திய தருணம் இது. ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு எல்லை இல்லை என்பதை இது நிரூபித்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உற்சாகமான வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமார் ரேஸிங் அணி அடுத்ததாக ஜூன் மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள ’12 மணி நேர பால் ரிச்சர்ட்’ (Paul Ricard) பந்தயத்தில் பங்கேற்கத் தயாராகி வருகிறது. சினிமாவில் இருந்து சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு முழுநேர பந்தய வீரராக அஜித் குமார் நிகழ்த்தி வரும் இந்தச் சாதனைகள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement