Advertisement

குடிநீர் தட்டுப்பாட்டால் அகத்தீஸ்வரமங்கலம் மக்கள் காலி குடங்களுடன் மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள அகத்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதால், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அகத்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குழாய் மூலம் குடிநீர் வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குடிநீர் கிடைக்காததால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 7.45 மணியளவில் திருக்கழுக்குன்றம் – கருங்குழி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திருக்கழுக்குன்றம் – மதுராந்தகம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினை குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement