தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சேவைத் துறை வளர்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) வாயிலாக நடைபெற்ற மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதியில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் SEZ மையங்கள் மூலம் ₹1.05 லட்சம் கோடி மதிப்பிலான மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி மதிப்பு, தமிழகத்தின் ஐடி துறையில் செங்கல்பட்டின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த பட்டியலில், சென்னை மாவட்டம் ₹66,186 கோடி மதிப்பிலான ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் உள்ள கோவை மாவட்டம் ₹13,286 கோடி ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிருசேரி, மகேந்திரா வேர்ல்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் பலவும் இங்கு இயங்கி வருவதால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மென்பொருள் ஏற்றுமதி மற்றும் சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றுவதோடு, தமிழகத்தை இந்தியாவின் முன்னணி ஐடி மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்த உதவுவதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.





