திருக்கழுக்குன்றம்: முத்தாரம்மன் கோவில் கற்சிலைகள் கரிகோல உலா

0
2

திருக்கழுக்குன்றம் அருகே அமைக்கப்பட்டு வரும் ஞானபுரீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள கற்சிலைகள் கரிகோல உலாவாக கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் மற்றும் அங்குள்ள தசரா திருவிழா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வழிபாட்டு மரபை திருக்கழுக்குன்றம் பகுதியிலும் நிலைநிறுத்தும் நோக்கில், பக்தர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் இணைந்து புதிய கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருக்கழுக்குன்றம் அருகே ஈகைரத்தினாபுரம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் ஞானபுரீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் மதுரைவீரன் சன்னிதியும் அமைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள முத்தாரம்மன் மற்றும் பிற தெய்வங்களின் கற்சிலைகள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டன. பின்னர் அவை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் கரிகோல உலாவாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

கரிகோல உலா என்பது புதிதாக உருவாக்கப்பட்ட சிலைகள் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பாரம்பரிய நிகழ்வாகும்.

சிலைகளை ஹிந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக வரவேற்றனர். பின்னர் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் சென்ற கற்சிலைகள், திருக்கழுக்குன்றத்தின் முக்கிய வீதிகள் வழியாக கரிகோல உலா வந்து புதிய கோவிலை அடைந்தன.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.