செங்கல்பட்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

0
3

2025-26 கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அறை இன்று திறந்து வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்தார்.

இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 14,783 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 1,719 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்வதோடு, தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு, திறன் மேம்பாடு மற்றும் மாற்று கல்வி வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது.

மாணவர்களின் கல்வி இடைநிறுத்தத்தைத் தடுக்கவும், அனைவரும் உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்ச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு உதயகுமார் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.