செங்கல்பட்டு மாவட்டத்தில் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய பெண்களுக்கு வழங்கப்படும் “கல்பனா சாவ்லா விருது”க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனையான Kalpana Chawla அவர்களின் நினைவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரச் செயல்களை புரிந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கப்படுகிறது.
இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்படும். இந்த விருது தமிழ்நாடு முதல்வரால் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான தமிழக அரசு விருது இணையதளம் https://www.awards.tn.gov.in மூலம் வரும் ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையதளத்தில் விண்ணப்பித்த நகலுடன், வீரச் செயல் தொடர்பான புகைப்படங்கள், செய்தித்தாள் வெட்டுப்பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழ் மருதம் எழுத்துருவிலும், ஆங்கில Verdana எழுத்துருவிலும் தலா 3 செட் புத்தக வடிவில் தயாரித்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “மாவட்ட சமூக நல அலுவலகம், B-H பிளாக், 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு – 603111” என்ற முகவரிக்கு ஜூன் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





