Home செங்கல்பட்டு சாமானியனுக்கு ஒரு சட்டம்? போலீசுக்கு ஒரு சட்டமா? இன்சூரன்ஸ் இல்லாத வண்டியில் ஹெல்மெட் இன்றி பறந்த...

சாமானியனுக்கு ஒரு சட்டம்? போலீசுக்கு ஒரு சட்டமா? இன்சூரன்ஸ் இல்லாத வண்டியில் ஹெல்மெட் இன்றி பறந்த காவலர்கள்!

0

பொதுமக்களுக்குச் சட்டம் பேசும் காவல்துறையினர் தங்களுக்கு என்று வரும்போது விதிமுறைகளை அப்பட்டமாகக் காற்றில் பறக்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதற்குச் சான்றாகச் செங்கல்பட்டில் இருசக்கர வாகனத்தில் காவலர்கள் ஹெல்மெட் இன்றிப் பயணித்த வீடியோ வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சீருடையில் இருந்த காவலர் ஒருவரும், ஒரு பெண் உதவி ஆய்வாளரும் (SI) இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அதிவேகமாக வாகனங்கள் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அடிப்படை விதியைக் கூட மதிக்காமல் இவர்கள் இருவரும் எவ்வித அச்சமும் இன்றித் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். இதனை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் சென்ற TN 72 AS 4657 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனத்தின் காப்பீடு (Insurance) கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதியே காலாவதியாகிவிட்டது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 11 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தைக் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தங்கு தடையின்றி இயக்கி வந்துள்ளனர். இதுமட்டுமன்றி, இதே வாகனத்தின் மீது ஏற்கனவே போக்குவரத்துத் துறையினரால் 6 விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை இன்னும் நிலுவையில் இருப்பதும் ஆன்லைன் தணிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

விதிமீறல்களின் மொத்த உருவமாக இருக்கும் இந்த இருசக்கர வாகனம் யாருடையது என்ற கேள்வி தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனமா அல்லது அந்த அதிகாரிகளின் சொந்த வாகனமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இது பறிமுதல் செய்யப்பட்ட வாகனமாக இருந்தால், அதைப் போலீஸார் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஏழை எளிய மக்கள் வண்டியை எடுத்தால் இன்சூரன்ஸ், ஹெல்மெட் எனச் சாலையின் மூலைக்கு மூலை மறைந்து நின்று அபராதம் விதிக்கும் காவல்துறை, தங்கள் துறையைச் சேர்ந்தவர்களின் இந்த அப்பட்டமான விதிமீறலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது எனச் சமூக ஆர்வலர்கள் காட்டமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உயர் அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

 

 

NO COMMENTS

Exit mobile version