Home செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் குடியிருப்பு இடிப்பு; பரபரப்பு

வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் குடியிருப்பு இடிப்பு; பரபரப்பு

0

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலின் பாழடைந்த செயல் அலுவலர் குடியிருப்பு இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வேதகிரீஸ்வரர் கோவிலில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் தங்குவதற்காக, பெரிய தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு வீடு கட்டப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கட்டிடம் காலப்போக்கில் சேதமடைந்து, ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக செயல் அலுவலர்கள் அந்த குடியிருப்பை பயன்படுத்துவதை நிறுத்தியிருந்தனர். மேலும், அப்பகுதி மக்கள் கட்டிட வளாகத்தில் பாம்புகள் நடமாடுவதாகவும், அதை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற முடிவு செய்து, நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியது. ஆனால், முன்னறிவிப்பு வழங்கப்படாமல் கட்டிடம் இடிக்கப்பட்டதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவில் நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் விளக்கமளிக்கையில், “பழங்கால கட்டிடம் இருந்த பகுதி மட்டும் கோவிலுக்கு சொந்தமானது. பாழடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அந்த இடத்தை முறையாக பராமரித்து, குத்தகைக்கு வழங்குவதன் மூலம் கோவிலுக்கு வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version