Advertisement

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை: வேகத்தடையால் விபத்து அபாயம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் காரணமாக தினந்தோறும் விபத்துகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சாலையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அதன் அருகே ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்விக்காக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் அதிகாரிகளின் வசதிக்காக அந்த நிறுவனம் எதிரே சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆனால், இந்த வேகத்தடைகள் குறித்து முன்கூட்டிய எச்சரிக்கை பலகைகள் போதுமான அளவில் இல்லாததால், அதிவேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்டவை திடீரென பிரேக் போட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி சிறிய விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் மண் பரிசோதனைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாததால் சாலை பல்லாங்குழி போல மாறியுள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே உயிரியல் பூங்கா சிக்னல் மற்றும் அருகிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புதிய வேகத்தடைகள் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Advertisement

அவசர சேவைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement