தாம்பரம் அருகே குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த வெங்கடேசன் (40), சொகுசு காரில் இரும்புலியூர் ஏரிக்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே பீர்க்கன்காரணையை சேர்ந்த பாலமுருகன் ஓட்டிவந்த ஸ்விப்ட் டிசையர் காரின் மீது வெங்கடேசன் ஓட்டிய கார் பக்கவாட்டில் மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய பிறகு நிற்காமல் வெங்கடேசன் காரை வேகமாக ஓட்டி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் இணைந்து துரத்திச் சென்று, ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஏரிக்கரை சிக்னல் பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது கார் ஓட்டிவந்த வெங்கடேசன் கடும் மதுபோதையில் தள்ளாடியபடி இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வம், வெங்கடேசன் மதுபோதையில் வாகனம் ஓட்டியதை உறுதி செய்து, அவரை தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேலும், வெங்கடேசன் தமிழக வெற்றிக் கழக அடையாள பேட்ஜ் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் கட்சியில் எந்த பொறுப்பில் உள்ளார், எதற்காக குடிபோதையில் வாகனம் ஓட்டினார், விபத்து ஏற்பட்ட பிறகும் ஏன் நிற்காமல் சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
